ரவிசாஸ்திரியும், பள்ளிக் குளத்து ஆமையும்!


நான் படித்த பள்ளி புழுதிவாக்கத்தில் இருந்தது. அது அரசினர் பள்ளி என்பதால் சுற்றுச்சுவர் போன்ற பாதுகாப்பு ஏதுமில்லாமல், ஒரு குளத்துக்கு அருகில் அமைந்திருந்தது. குளத்துக்கு நடுவில் ஒரு கிணறும் உண்டு. மழைக்காலத்தில் குளம் நிரம்பி விட்டால் பள்ளியும், பள்ளி மைதானமும் குளத்தோடு சங்கமம் ஆகிவிடுமென்பதால் ஒருவாரம் எங்களுக்கெல்லாம் விடுமுறை தான்.

குளத்தில் தண்ணீர் ஓரளவு வற்றிய பின்பே பள்ளி திறக்கப்படும். அந்த நேரத்தில் எங்கிருந்தோ குளத்துக்கு சில ஆமைகளும் வந்துவிடும். ஆமைகளை நோக்கி கல்லெறிந்து அது உடனே தண்ணீருக்குள் வேகமாக கைகளை அடித்து நீந்துவதை பார்ப்பது எங்களது பொழுதுபோக்கு.

குளம் மார்ச்சு - ஏப்ரல் மாதங்களில் முற்றிலுமாக வற்றிவிடும். அந்த நேரத்தில் குளத்தில் இருக்கும் ஆமைகள் அருகிலிருக்கும் வயல் கிணறுகளை நோக்கி தன் பயணத்தை தொடரும். சில நேரங்களில் ஏதாவது சோம்பேறி ஆமைகள் பகலிலேயே கூட தன் பயணத்தை தொடங்கும். காலையில் பள்ளிக்கு கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிட்டால் அந்த ஆமைகள் நடந்துசெல்வதை காணமுடியும்.

ஆரம்பத்தில் அதன்மீது கல்லெறிந்து விளையாடினோம். பி.டி.மாஸ்டரின் கண்டிப்பால் பிற்பாடு ஏற்படுத்தப்பட்ட ஆமை மீது கல்லெறிபவன் கிரவுண்டை பத்துமுறை ஆமைபோல நடந்துவரவேண்டும் என்ற தண்டனையால் நாங்கள் கல்லெறிவதை நிறுத்தினோம். காலையில் குளத்தை விட்டு கிளம்பும் ஆமையை உணவு நேரத்திலும் கூட காணமுடியும். அதிகபட்சமாக 400 மீட்டருக்கு பயணம் செய்திருக்கும். எறும்பு கூட ஆமையை விட வேகமாக நிலத்தில் பயணிக்கக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

* - * - * - * - * - * - * - * -


அது எந்த வருடம் என்பது நினைவில்லை. கபில்தேவ், கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் இந்திய கிரிக்கெட் அணியில் அப்போது இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டி அது. அந்த தொடரின் இறுதிப்போட்டி அதுவென்று நினைக்கிறேன். மகேஷ் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தோம்.

இரண்டாவதாக இந்தியா விளையாடிக் கொண்டிருந்தது. ரவிசாஸ்திரி கட்டையை போட்டுக் கொண்டிருந்தார். ரவிசாஸ்திரியின் கட்டையால் இந்திய அணியின் ஓட்டவிகிதம் வெகுவாக குறைந்து எதிரில் ஆடும் ஆட்டக்காரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே வந்தவர்கள் எல்லாம் தூக்கி தூக்கி அடித்து அவுட் ஆகிக் கொண்டிருந்தார்கள். எதிர்முனையில் நின்றுகொண்டிருந்தவர்களுக்கு இருந்த பதட்டத்தில் கொஞ்சமாவது நம்ப சாஸ்திரிக்கு இருக்க வேண்டுமே? ம்ஹூம்...

கடைசி வரை கட்டையை போட்டு ஐம்பது ஓட்டங்கள் எடுத்த ரவி சாஸ்திரி, அதனால் மேன் ஆப் த மேட்சோ, அல்லது மேன் ஆப் த சீரியஸோ வாங்கி, ஒரு காரை பரிசாக பெற்றார். அந்தப் போட்டியில் ரவிசாஸ்திரி ரன் குவித்திராமல், அவுட் ஆகி இருந்தால் கூட இந்தியா சுலபமாக வென்றிருக்கும் என்று மகேஷின் அப்பா நொந்துப் போய் சொன்னார்.

அதற்குப் பிறகு ரவிசாஸ்திரி என்றாலே எங்களுக்கெல்லாம் கடுப்பு. ஒருமுனையில் ரவிசாஸ்திரி நின்றால் அவுட் ஆகவேண்டுமே என்று வேண்டிக்கொள்வோம். ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கினாலும் கூட நாற்பது ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து முப்பத்து சொச்சம் ரன் மட்டுமே எடுத்து கடுப்பேடுத்துவதில் ரவிசாஸ்திரிக்கு நிகர் ரவிசாஸ்திரி தான். டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி, ஒன்டே மேச்சாக இருந்தாலும் சரி, லாஸ்ட் பாலில் மட்டும் ஒரு ரன் அடித்து ஆட்டையை போட்டு ஓவர் காஜ் அடித்து கட்டையை போடுவதில் ரவிசாஸ்திரி வல்லவர்.

ரவிசாஸ்திரி மட்டையை சுற்றியபடியே மைதானத்துக்குள் நுழைந்தால் “ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருபடாது. ஆமை மாதிரியே வர்றான் பாரு” என்று மகேஷின் அப்பா வெறுப்போடு சொல்வார். அவர் கபில்தேவின் தீவிர ரசிகர். அவர் ஒவ்வொரு முறை இதுபோல சொல்லும் போதெல்லாம் எங்கள் பள்ளி குளத்து ஆமைகளின் நடைப்பயணம் நினைவுக்கு வரும்.

* - * - * - * - * - * - * - * -

இன்று காலை தட்ஸ்தமிழில் படித்த செய்தி ஒன்று.

சமீபத்தில் 1990ஆம் ஆண்டு ரித்துவை திருமணம் செய்துகொண்ட ரவிசாஸ்திரி நேற்று தான் முதன்முதலாக தந்தையானார். மும்பை ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் அவருடைய மனைவி ரித்துவுக்கு அழகிய பெண்குழந்தை ஒன்று நேற்று பிறந்தது.

ருத்ரநாகம்! - திரைவிமர்சனம் :-(


நம்மூர் இராம.நாராயணன் எப்படியோ அசோக் அமிர்தராஜ் மாதிரி ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளரை பிடித்து, ஸ்க்ரிப்ட் ரெடி செய்து ஒரு ஆங்கிலப்படம் எடுத்தால் அது D-WARஐ விட பன்மடங்கு தரமாக இருக்கும். ஒரு கொரிய இயக்குனர் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டிருப்பதும் இராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் என்பது செம ஐரணி.

விண்ணுலகில் ஆயிரக்கணக்கான நாகங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறதாம். அவற்றில் சில நாகங்கள் ஐநூறு வருடங்களுக்கு ஒருமுறை பூமிக்கு வந்து ட்ராகன்களாக மாறும் சக்திவாய்ந்தவையாம். தெய்வாம்சத்தோடு (மார்புக்கு சற்றுமேலே தோளுக்கு அருகில் மச்சத்தோடு) பிறக்கும் பெண்ணை அவளது இருபதாவது வயதில் ருத்ரநாகத்துக்கு அர்ப்பணம் செய்தால் உலகம் சுபிட்சமாக இருக்குமாம். இதில் தீயசக்தி கொண்ட நாகம் ஒன்றிருக்கிறது. அந்த பெண்ணை அந்த தீயநாகம் அடைந்துவிட்டால் உலகம் அதன் கட்டுப்பாட்டுக்கு போய்விடுமாம்.

தென்கொரியாவில் ஒரு அரசனுக்கு மகளாக அந்த தெய்வாம்சம் கொண்ட பெண் பிறக்க, தீயசக்தி கொண்ட நாகத்தின் பெரும்படை அந்த ஊரை சின்னாபின்னபடுத்தி அந்த பெண்ணை அடைய நினைக்கிறது. அந்த பெண்ணை அவளது பாதுகாவலன் (காதலனும் கூட) காப்பாற்ற முயற்சிக்க, நாகம் பின்தொடர அந்த பெண்ணும், அவளது பாதுகாவலனும் இறந்துவிடுகிறார்கள்.

அடுத்த ஜென்மத்தில் இருவரும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறக்க, தீயசக்தி கொண்ட நாகம் தன் படையோடு வந்து நகரை சின்னாபின்னப்படுத்துகிறது. முடிவு என்ன என்பது வெள்ளித்திரையில். இதை விட சிறந்த கதைகளை ஆடிவெள்ளி, வெள்ளிக்கிழமை விரதம் போன்ற படங்களில் பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் பார்த்துவிட்டோம். இப்போதுதான் ஹாலிவுட்டில் எடுக்கிறார்கள் போலிருக்கிறது!

கிராபிக்ஸ் தவிர்த்து படத்தில் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. ஒரே ஒரு மேட்டர் சீன் வருவது போலிருக்கும் சூழ்நிலையில் அதையும் அந்த பாம்பு வந்து கெடுத்து தொலைக்கிறது. காதலர்கள் மொக்கை மாதிரி ஓடிக்கொண்டிருக்க, அசாத்திய சக்தி பெற்ற பாம்பும், அதன் படைகளும் அவர்கள் ஓடும்வரை அவகாசம் கொடுத்து தேமேவென்று பின்னால் ஓடிவருவது நகைச்சுவை.

கூடை கூடையாக காதில் பூச்சுற்றிக்கொள்ள ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக இப்படத்தை பார்க்கலாம். அதுவும் க்ளைமேக்ஸில் கெட்டபாம்பை (?), நல்லபாம்பு வெல்லும் காட்சி... அய்யோ.. அய்யோ.. ஹாலிவுட்டுக்கும் கிறுக்கு புடிச்சிப்போச்சே?

பப்பர மிட்டாய்!


முன்பெல்லாம் குழந்தைகளுக்கு கதை சொல்ல வீட்டில் தாத்தா, பாட்டி இருப்பார்கள். இல்லையேல் இரவில் அப்பவோ, அம்மாவோ தூங்குவதற்கு முன்னால் கதை சொல்லுவார்கள். ஈசாப் குட்டிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், நல்லதங்காள் கதை, இராமாயணம், மகாபாரதம் என்று ஏகப்பட்ட கதைகளை என் சிறுவயதில் பெற்றோரிடமோ, தாத்தாவிடமோ கேட்டிருக்கிறேன்.

இப்போதைய தலைமுறை வித்தியாசமாக இருக்கிறது. கணவன் - மனைவி இருவரும் பணிக்கு செல்ல, பெரியவர்கள் ஊரில் இருக்கிறார்கள். பணிப்பெண்ணின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு கதை சொல்ல யாரும் தயாராக இல்லை. டிவியோ அல்லது கணினியோ சொன்னால் தான் உண்டு.

இந்நிலையில் களஞ்சியம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் குழந்தைகளுக்கு கதை சொல்ல தயாராக இருக்கிறது. நேரடியாக வந்து ஒவ்வொரு குழந்தைக்கும் கதை சொல்லுவது சாத்தியமில்லை என்பதால் பப்பரமிட்டாய் என்ற பெயரில் ஒரு ஒலித்தட்டினை உருவாக்கி பள்ளிகள் மற்றும் அமைப்புகள் மூலமாக தமிழ்நாடெங்கும் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது களஞ்சியம் நிறுவனம்.

இந்த ஒலித்தட்டின் சிறப்பு என்னவென்றால் குட்டீஸ்களுக்கு கதை சொல்லும் கதைசொல்லிகளும் குட்டீஸ் தான். மொத்தம் ஆறு குட்டீஸ் ஒலிப்பதிய ஒத்துழைத்திருக்கிறார்கள். நாம் சிறுவயதில் கேட்ட சிங்கம், புலி, குரங்கு கதைகள் தான் என்றாலும் இசையோடு இணைந்து குட்டிக்குரலில் கேட்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் சுகானுபவமாய் இருக்கும்.

இந்த ஒலித்தட்டின் மூலமாக குழந்தைகளுக்கு கற்பனைத்திறனையும், உபயோகமான பொழுதுபோக்கையும், அறிவுவளர்ச்சியையும் தரமுடியும் என்று களஞ்சியம் நிறுவனத்தார் நினைக்கிறார்கள். குழந்தைகள் இணைந்து பாட வாகாக ஒலித்தட்டில் எளிய பாடல்களும் உண்டு. மைதிரி எஜுகேஷனல் அண்ட் சாரிடபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் இலவசமாக குழந்தைகளுக்கு இந்த ஒலித்தட்டினை வழங்க ஆகும் செலவை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

என் சகோதரியின் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு ஒலித்தட்டு கேட்டிருக்கிறேன். உங்கள் குழந்தைகளுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கு “பப்பர மிட்டாய்” ஒலித்தட்டு தேவைபட்டின் கீழ்க்கண்ட முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் முகவரியை தெரிவித்தால் அஞ்சலில் ஒலித்தட்டை அனுப்பி வைப்பார்கள்.

எண். 11, அவதார் அபார்ட்மெண்ட்ஸ்,
27, பாலகிருஷ்ணன் ரோடு, வால்மிகி நகர்,
திருவான்மியூர், சென்னை - 600 041. இந்தியா.
தொலைபேசி : 91-44-24455568 / 43042414
மின்னஞ்சல் முகவரி : kalanjiyam@gmail.com

பாஸ்வேர்டு திருட்டு சாத்தியமா?

சாத்தியம் தான்!

ஏற்கனவே இட்லிவடை, தமிழச்சி உள்ளிட்டோரின் பாஸ்வேர்டு ஒரு போலி ஆர்குட் லிங்க் மூலமாக களவாடப்பட்டிருக்கிறது. அதுபோலவே பருவத்தின் பெயர் முன்பாதியாக கொண்டவரும், “ர”வில் ஆரம்பித்து “வி”யில் பெயர்முடியும் பதிவரின் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவரின் பாஸ்வேர்டுகளை கூட சம்பந்தப்பட்ட பதிவர் ஒரு சிறிய ஜாவா நிரலை சொருகி அன்பளிப்பாக பெறமுடியுமாம். (திருட்டு கெட்டவார்த்தை)

ஓக்கே, ஜோக்ஸ் அபார்ட்...

நம் வாழ்க்கை களத்தை போலவே, இணையக் களமும் ஒரு பாதுகாப்பில்லாத களம் என்பதில் மாறுபட்ட கருத்து எதுவுமில்லை. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது நம் கார் மீது யார் வேண்டுமானாலும் மிக சுலபமாக கல்வீசி தாக்கி செல்லலாம் என்பதைப் போல, இணையத்திலும் யார்வேண்டுமானாலும் நமது பாஸ்வேர்டை மிக சுலபமாக சுடமுடியும்.

நமக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி, அதற்குள்ளாக ஒரு ஹாக்கிங் மென்பொருளை மறைத்து அனுப்பி அதன் மூலமாக கூட நமது கணினி, பாஸ்வேர்டு இத்யாதி விவரங்களை அறிந்துகொள்ள முடியுமாம். அவ்வளவு ஏன்? நாம் பொதுவாக பயன்படுத்தும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ் இணைய உலாவிகளில் கூட ஸ்பைவேர் சொருகி நமது தகவல்களை மைக்ரோசாப்டு போன்ற நிறுவனங்கள் கூட தெரிந்துகொள்ளமுடியும். இவ்வளவு சுலபமான வழிகள் இருக்க, இந்த சப்பை மேட்டருக்காக தமிழ் எழுதியை மூன்று வருடங்கள் இரவுபகலாக உழைத்து உருவாக்கி தான் சுடவேண்டும் என்ற அவசியம் இல்லை.

நிறைய பேருக்கு பல இணையத்தளங்களில் மின்னஞ்சல் சேவை இருக்கிறது. நூற்றுக்கு எண்பத்தி ஐந்து சதவிகிதம் பேர் யூனிக் பாஸ்வேர்டு தான் வைத்திருக்கிறோம். இதை பயன்படுத்தி கூகிள், யாஹூ மாதிரியான இணையத்தளங்கள் கூட நமது பாஸ்வேர்டுகளை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக இணையத்தையே பயன்படுத்த மாட்டேன் என்று யாராலேயாவது சொல்லமுடியுமா?

யாஹூ, கூகிள் போன்றவற்றின் மீது குருட்டுத்தனமாக நம்பிக்கை வைக்கும் நாம் ஏன் தமிழில் உருவாக்கப்பட்ட எ-கலப்பை, என்.எச்.எம்., தமிழ்நீட்சி போன்றவற்றின் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது என்பதற்கு சரியான காரணத்தை அவதூறாளர்கள் தான் சொல்லவேண்டும்.

தமிழ்மணம் திரட்டி எப்படி தனது பயனாளர்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாது என்று நானும், நிறைய பதிவர்களும் நம்புகிறோமோ அதுபோலவே எ-கலப்பை, என்.எச்.எம்., தமிழ்நீட்சி போன்ற மென்பொருள் உருவாக்கியவர்களும் நமது தனிப்பட்ட தகவல்களை பெறவில்லை என்று நூறுசதம் நம்புகிறேன். பூ என்ற ஒரு பதிவர் எழுதியிருக்கும் இடுகை நமது பல கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடியதாக இருக்கிறது. அவசியம் வாசிக்கவும்!

புட்டி விளம்பரம், மன்னிக்கவும் குட்டி விளம்பரம் : பாஸ்வேர்டு களவு சாத்தியமா? போன்ற சூடான பிரச்சினைகளும் கூட நாளை சென்னை கடற்கரை, காந்தி சிலைக்கு அருகில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மொக்கைப்பதிவர் சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. எனவே பதிவர்களே, வாசகர்களே அலைகடலென சுனாமியாய் திரண்டு வாரீர்!

சினிமா தியேட்டர் ஸ்பெஷல்!


சென்னையின் சாந்தி தியேட்டர் பற்றி கிண்டலாக சொல்வார்கள். சிவாஜியின் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக் கொண்டாலும் கூட சாந்தியில் இழுத்துப் பிடித்து ஓட்டி நூறுநாள் என்று கணக்கு காண்பிப்பார்களாம். சிவாஜிக்கு பிறகு பிரபுவின் பல மொக்கைப்படங்களை கூட நூறு நாள் ஓட்டி வெற்றிப்படமாக்குவது சாந்தி தியேட்டரின் வாடிக்கை. படு ஊத்தல் படமான பிரபுவின் நூறாவது திரைப்படமான ராஜகுமாரனை கூட ஒருவாரத்துக்கும் மேலாக ஓட்டிய சாதனை வரலாறு சாந்தி தியேட்டருக்கு உண்டு.

அந்தப் பாரம்பரியம் அப்படியே தொடருகிறது போலிருக்கிறது. சந்திரமுகி ஹிட் படம் தான் என்றாலும் 800 நாட்கள் ஓடுமளவிற்கெல்லாம் ஹிட் இல்லை. சும்மாவாச்சுக்கும் அந்தப் படத்தை 800 நாள் வரை ஈயோட்டிய தியேட்டர் சாந்தி தியேட்டர். இப்போது சாந்தி தியேட்டரில் வெற்றிகரமான எழுபத்தைந்தாவது நாளாக லிட்டில் சூப்பர் ஸ்டாரின் காளை ஓடுகிறது என்றாலே சாந்தி தியேட்டரின் Content எத்தகையது என்று தெரிந்துகொள்ளலாம்.

சாந்தி மாதிரியே இன்னொரு தியேட்டர் உண்டு, அயனாவரம் கோபிகிருஷ்ணா. சிம்புவின் வல்லவனை வெள்ளிவிழா படமாக்கி புண்ணியம் கட்டிக்கொண்ட தியேட்டர் அது. டி.ராஜேந்தரின் வீராச்சாமியும் கூட கோபிகிருஷ்ணா காம்ப்ளக்ஸில் நூறு நாட்கள் ஓடியது. பருத்திவீரன் ஓராண்டினை கடந்தது. இப்போது அங்கும் காளை ஓடிக்கொண்டிருக்கிறது.

* - * - * - * - * - * - * - * -

சாந்தி, கோபிகிருஷ்ணா தியேட்டர்களுக்கு நேரெதிரான கொள்கை கொண்டது ராயப்பேட்டை பைலட் தியேட்டர். இந்த தியேட்டரை பற்றி நாற்பதை கடந்த பெருசுகள் ரொம்பவும் சிலாகிப்பதுண்டு. என்னதான் படங்கள் வசூலை வாரி இறைத்தாலும் இரண்டு வாரங்களுக்கு மேலாக எந்த படத்தையும் ஓட்டுவதில்லை. Content மாற்றிக்கொண்டே இருப்பார்கள். தமிழகத்தில் இப்போது பரபரப்பாக ஓடும் 10,000 BC, போலிஸ் ஸ்டோரி மொழிமாற்றப் படங்கள் கூட இருவாரத்தை தாண்டவில்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

ஹவுஸ்ஃபுல் ஆக சாத்தியமில்லாத அளவுக்கு மிகப்பெரிய ஆடிட்டோரியம் என்றாலும் சுத்தம் என்ற மேட்டரில் இத்தியேட்டர் நிர்வாகம் கோட்டை விட்டு விடுகிறது. டாய்லெட் வசதிகள் இருந்தாலும் தியேட்டரின் பக்கவாட்டிலிருக்கும் ஓபன் டாய்லெட்டையே ரசிகர்கள் நாடுகிறார்கள்.

சத்யம் சினிமாஸை விட பைலட்டின் ஒலிநுட்பம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சத்யம் சினிமாஸில் ஒலி துல்லியமாக இருந்தாலும், ரொம்பவும் மைல்டாக இருக்கும். மாறாக பைலட்டிலோ ஆங்கிலப்படங்கள் பார்ப்பது ஒலிரீதியாக நல்ல அனுபவம். துப்பாக்கிச்சூடு காட்சியாக வந்தால் உண்மையிலே திரையரங்கில் துப்பாக்கிச்சூடு நடப்பது போன்ற வைல்டான ஒலியனுபவம் கிடைக்கும். என்ன ஸ்க்ரீனில் லைட்டிங் பத்தாது. சத்யம், ஐனாக்ஸ் போன்றவற்றை ஒப்பிடும்போது திரை ரொம்பவும் டல். ஐனாக்ஸில் சவுண்டு சுத்த மோசம், ஐனாக்ஸை விட நங்கநல்லூர் வெற்றிவேல் காம்ப்ளக்ஸில் டி.டி.எஸ். அருமையாக இருக்கிறது.

* - * - * - * - * - * - * - * -

ஒரு சின்ன விளம்பர இடைவேளை!

பரபரப்பான சூழ்நிலையில் சென்னை கடற்கரையில், வரும் 30 மார்ச், ஞாயிறு அன்று மாலை 5.30 மணியளவில் வலைப்பதிவர் சந்திப்பு நடக்கிறது. அனானிகளும், வாசகர்களும், பதிவர்களும் அலைகடலென திரண்டு வாரீர் என்று குசும்பன் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்!!


* - * - * - * - * - * - * - * -

ஓக்கே, கம்மிங் பேக் டூ த பாயிண்ட்...


பரங்கிமலை ஜோதி திரையரங்கில் புரட்சித்தோழர் ஷகீலா நடித்த இரவுமழை என்ற சாமி திரைப்படம் இன்று திரையிடப்பட்டிருக்கிறது. இந்த திரையரங்கில் டி.டி.எஸ், ஏ.சி. போன்ற எந்த வசதியும் இல்லையென்றாலும் படத்தின் Content அவற்றையெல்லாம் மறக்கச் செய்யும் என்பதில் எந்த ஐயமுமில்லை. நான் குட்டிப்பாப்பாவாக இருந்தபோது இந்த தியேட்டரில் தான் சங்கராபரணம் பார்த்தேனாம்.

இந்த திரையரங்கை திறந்துவைத்து புண்ணியம் கட்டிக் கொண்டவர் டாக்டர் கலைஞர் என்பது வரலாற்றில் பதிவுசெய்யப்பட வேண்டிய ஒரு பெட்டிச் செய்தி!

* - * - * - * - * - * - * - * -

பதிவர் ஸ்கேன் ரிப்போர்ட் ‘டோண்டு ராகவன்'


ஒரு காலத்தில் நான் கருத்துக்களம் ஒன்றில் களமாடிக் கொண்டிருந்தபோது அருண் என்ற நண்பர் ஒரு திரி இட்டிருந்தார். இரட்டைத் தம்ளர் முறை பற்றி சாடி வந்திருந்த பதிவு அது. அதை எழுதியவர் டோண்டு ராகவன் என்று அருண் சொல்லியிருந்தார். அத்திரியில் இருந்த கருத்துக்கள் குறித்த எனது மாறுபாடுகளை மிகக்காரமான மொழியில் எழுதியிருந்தேன். டோண்டு ராகவன் என்ற பெயரை கண்டதுமே ஒரு முப்பது வயது அம்பி என்ற எண்ணம் தான் அப்போது இருந்தது.

அருண் ரொம்ப நாட்களாக என்னை வலைப்பூ ஒன்று தொடங்கச் சொல்லி அப்போது வற்புறுத்தி வந்தார். எனக்கு தொழில்நுட்ப அறிவு இல்லையென்று சொல்லி தள்ளிப் பொட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அருணின் டார்ச்சர் தாங்காமல் ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் தொடங்கிவிட்டேன். தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதற்கு டெம்ப்ளேட்டில் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் அருண் தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால் பிளாக்கர் அக்கவுண்டை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. நிறைய பதிவுகளில் பின்னூட்டங்கள் இருந்ததை கண்டேன். அதுபோல எங்காவது பின்னூட்டம் போடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அருண் டோண்டு சாரின் தீவிர ரசிகர் என்பதால் டோண்டுவின் பதிவை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

எனவே நான் பதிவு எழுதத்தொடங்கி பிள்ளையார் சுழியாக டோண்டு சார் அவர்களின் பதிவில் துரதிருஷ்டவசமாக என் முதல் பின்னூட்டம் ஒன்றினை ஆர்வக்கோளாறில் பதிந்தேன். அது என்ன கருமம் என்று எனக்கு இப்போது நினைவில்லை. பின்னூட்டம் ரிலீஸ் ஆனதுமே Luckyluke என்ற பெயரையும், அவதாரையும் கண்ட எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே என் வலையில் ஒரு அறிமுகப்பதிவு ஒன்றினையும் சும்மா பதிந்து வைத்தேன். கமெண்டு மாடரேஷன் மாதிரியான சங்கதிகள் அப்போது எனக்கு தெரியாது. வலையை சும்மா தொடங்கி விட்டோம், எதுவும் எழுதவெல்லாம் வேண்டாம். தேவைப்பட்டால் ஆங்காங்கே (குறிப்பாக டோண்டு பதிவில்) பின்னூட்டம் மட்டும் போடலாம் என்பதே என்னுடைய அப்போதைய தீர்மானமாக இருந்தது.

மறுநாள் காலை சும்மா டைம் பாஸுக்கு என் வலைப்பூவை திறந்தவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. என்னை அன்பாக ‘டோண்டுவுக்கு பின்னூட்டம் போடவேண்டாம்' என்று கூறி ஒரு பின்னூட்டமும், அதற்கு கீழே பைந்தமிழில் நான்கைந்து பின்னூட்டங்களும் போடப்பட்டிருந்தது. “எவண்டா அது?” என்று பொங்கியெழுந்து என்னை திட்டி பின்னூட்டம் போட்டவர்களை வகுந்தெடுத்து சில பதிவுகள் போட்டேன். அப்படி போடத்தொடங்கிய பதிவுகள் இன்று போயும், போயும் பெயரிலியிடம் எல்லாம் போய் சண்டை போடும் லெவலுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எனவே நான் பதிவுலகுக்கு வந்ததற்கு டோண்டுவும், போலி டோண்டுவும் சமபங்கு புண்ணியம் கட்டிக் கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் டோண்டு சாரை நக்கல் அடித்து ஏதாவது பதிவு போட எண்ணினால் அவருக்கு தொலைபேசி அனுமதி கேட்பேன். “அதனால என்ன கண்ணா? பதிவு தானே போட்டுக்கோ!” என்பார். தொடர்ந்து இரண்டு மூன்று முறை அதுபோல கேட்டபின்னர், “இதுக்கெல்லாம் எதுக்கு அனுமதி? என்னை பத்தி உன் மனசுலே என்ன நினைச்சுருக்கியோ அதை எழுதப்போறே? வேணாம்னு சொன்னாலும் பதிவிலே இல்லாட்டியும், மனசுலே இருக்கும் இல்லியா?” என்று ஒருமுறை கேட்டார். அதன் பின்னர் அவரை பற்றி நல்லவிதமாக எழுதவும் சரி, நக்கலடிக்கவும் சரி அனுமதி கேட்பதில்லை.

அதர் ஆப்ஷன் கமெண்டு பற்றியெல்லாம் எனக்கு அவ்வளவாக அறிவில்லாத காலத்தில் யாராவது குறும்பு டீம் நண்பர் யார் பெயரிலாவது ஏதாவது ஏடாகூட கமெண்டு போட்டுவிடுவார். அந்த கமெண்டு டோண்டு சாருக்கு சம்பந்தமில்லாததாக இருந்தாலும் கூட போன் செய்து அது ஒரு போலி கமெண்டு, நீக்கிவிடு என்பார். அப்போதெல்லாம் டோண்டு சாருக்கு அதர்-ஆப்ஷன் கமெண்டுகள் மீது அப்படி ஒரு கொலைவெறி!

அவருக்கு பிடித்தமாதிரி அல்லது அவர் ரசிக்கும்வகையில் யார் பதிவெழுதி இருந்தாலும் உடனடியாக ஆஜராகி ஒரு பின்னூட்டம் போட்டுவிடுவது அவர் வாடிக்கை. அதுபோலவே அவருக்கு பிடிக்காத பதிவெழுதுபவர்களுக்கு அவரது பின்னூட்டம் கேரண்டி. அவர் தொடர்பிலிருக்கும் பதிவராக இருந்தால் உடனடியாக தொலைபேசி பாராட்டு தெரிவிப்பார்.

ரவி, நான், கிழுமாத்தூர், வரவனை, பொட்டீக்கடை உள்ளிட்ட கொலைவெறிக்குழு ஒன்று வெயிட்டாக அப்போது ஃபார்ம் ஆகி இருந்தது. எந்த பதிவாக இருந்தாலும் மொத்தமாக கும்மி நூறு, நூற்றி ஐம்பது பின்னூட்டங்களாவது போட்டுவிடுவது எங்கள் வாடிக்கை. துரதிருஷ்டவசமாக டோண்டு சாரின் பதிவில் அதர்-அனானி ஆப்ஷன்களை டிஸேபிள் செய்திருந்ததால் அவரது பதிவுகளில் எங்களால் கும்மி அடிக்க முடியவில்லை. ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் நேரில் சந்தித்து அதர்-அனானிகளுக்கு அவரது பதிவில் இடமளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். காமராஜர் பாணியில் ”ஆகட்டும், பார்க்கலாம்!” என்றவர் மறுநாளே அதர்-அனானி ஆப்ஷனை திறந்துவைத்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.

தனிமனித ஆளுமை மேம்பாடு (பர்சனாலிட்டி டெவலப்மெண்ட்) குறித்து அவரது அனுபவங்கள் வாயிலாக மிக அற்புதமாக எழுதக்கூடிய எழுத்தாளர் அவர். துக்ளக், அரசியல், கேள்வி-பதில் என்று மொக்கை போடாமல் அவரது அனுபவங்களை பிரதானமாக அவரது வலையில் பதிந்தால் எதிர்காலத்தில் வலையுலக வரலாற்றில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அவருக்கு இருக்கும். அவரது முரட்டு வைத்தியம் தொடர்களின் தீவிர ரசிகன் நான். குறிப்பாக IDPLல் பணிபுரியும்போது அவர் சைக்கிளில் அலுவலகத்துக்கு சென்றது குறித்த பதிவு நான் அடிக்கடி வாசிக்கும் பதிவுகளில் ஒன்று.

முரளிமனோகராக அவரை எல்லோரோடும் சேர்ந்து கும்மியப்பிறகு ஏனோ அவரிடம் தொலைபேசவும், நேரில் பார்க்கவும் எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆனால் அவரோ அதுகுறித்த எந்த கோபமுமின்றி “ஹல்லோ.. லக்கிலூக்!” என்று பேச ஆரம்பித்தார். அது தான் டோண்டு சார். காண்டு கஜேந்திரன் தொடர்பதிவுகளை நான் எழுதித்தள்ளுவதை யார் வாசிக்கிறார்களோ இல்லையோ, டோண்டு சார் வாசித்து முதலில் பாராட்டி விடுகிறார். அவரது தலையை டெண்டுல்கர் உடலோடு ஒட்டிப் போட்ட “டோண்டுல்கர்” கிராபிக்ஸ் போட்ட பதிவை நிரம்பவும் ரசித்தார். பதிவுலக மோதல்களையெல்லாம் ஒருபுறம் தள்ளிவைத்து தன்னை எதிர்த்து எழுதுபவர்களிடமும் நல்ல முறையில் நட்பு பாராட்டுவார். பதிவுலகை தவிர்த்து தனிப்பட்ட முறையிலும் என்னோடு நட்பாக இருப்பவர்களில் டோண்டு சாரும் ஒருவர்.

அவரது மத-சாத வெறியை தவிர்த்துப் பார்த்தோமானால் (அது கூட நேரில் பழகும்போது தெரியாது) தனிப்பட்ட முறையில் எல்லோரும் நேசிக்கக்கூடிய, நட்பு பாராட்டக்கூடிய ஒரு நல்ல மனிதர் டோண்டு ராகவன்!!

தமிழ்மண நிர்வாகத்துக்கு நன்றி!

“நாட்டாமை! என் பொண்ணு கைய புடிச்சி உங்க பங்காளி மவன் இழுத்துட்டான். நீங்க தான் நல்ல தீர்ப்பா சொல்லணும்!”

“சொல்லிப்புடுவோம். சாட்சி யாரு?”

“அய்யா அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்ததோட இல்லாம, தாவணியையும் உருவிட்டான் உங்க பங்காளி மவன். அத நான் நேர்ல பார்த்தேனுங்கோ!”

“பதிலுக்கு அந்த பொண்ணு என்ன பண்ணா?”

“அவளும் பதிலுக்கு அவனோட கைய புடிச்சி இழுத்துப்புட்டு, டவுசரை உருவிட்டாங்கோ!”

“நீ பொண்ணுக்கு என்ன மொறை வேணும்”

“தாய் மாமனுங்கோ!”

“செல்லாது! செல்லாது!”

“அய்யா நானும் அந்த கோராமையை பார்த்தேனுங்கோ!”

“நீ பொண்ணுக்கு என்ன மொறை வேணும்?”

“மொறையெல்லாம் ஏதும் கிடையாதுங்கோ. எங்க தெருலே தான் அந்த பொண்ணு வீடும் இருக்குதுங்கோ!”

“செல்லாது. செல்லாது!”

“அய்யா நாங்க எல்லோரும் உங்க பங்காளி மவன் பண்ணதை நேருலே பார்த்தோங்கோ!” ஊர்மக்கள் கோரஸாக சொல்கிறார்கள்.

“செல்லாது. செல்லாது. யோவ் என்னதான் இருந்தாலும் பையன் என்னோட பங்காளி மவன்யா. சொத்தை, கித்தை பிரிச்சி கேட்டான்னா உங்க நாட்டாமை நெலைமை என்னத்துக்கு ஆவும்? எந்த சாட்சியும் இல்லைன்னு சொல்லி நாட்டாமை பங்காளி மவன் மேலே கொடுத்த பிராதை தள்ளுபடி பண்ணுறேன்”

“நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு!” என்று யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் அந்த பெண்ணை நாட்டாமை பங்காளி மகனோடு 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கொண்டு போக சொல்லி அதிகபட்ச தீர்ப்பை நாட்டாமை தரப்போகிறார். தேவையா நமக்கு?

என் பதிவினை தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்கிய தமிழ்மண நிர்வாகிகளையும், நீக்குவதற்கு ஆதரவு தந்த முன்னாள் நிர்வாகியையும் அவர்களது நடுநிலையான நீதிபரிபாலனத்துக்காக பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

தானே கேள்வி தானே பதில் - அதிரடிப் பதிப்பு!!



கேள்வி : தமிழ் வலையுலகம் இப்போது இருக்கும் இறுக்கமான சூழ்நிலையில் வரும் ஞாயிறு (மார்ச் 30) நடைபெறவிருக்கும் சந்திப்பு நடக்குமா?

லக்கி : இறுக்கத்தை தளர்த்தத் தானே சந்திப்புகள்? மொக்கை சந்திப்பு கண்டிப்பாக நடக்கும். இந்த சந்திப்பை யாரும் ஆர்கனைஸ் செய்யவில்லை. சந்திப்பில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பதிவரும் ஆர்கனைசர் தான். குசும்பன் தன் திருமணத்தையொட்டி சென்னை வலைப்பதிவர்களை அழைக்க விரும்புகிறார். அதை சாக்காக வைத்து மொக்கை சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மொக்கை மன்னன் அபி அப்பாவும் ஸ்பெஷல் அட்ராக்சனாக இச்சந்திப்பில் கலந்துகொள்கிறார். இச்சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே திண்டுக்கல்லில் ‘கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம்' என்று கொஞ்சி பேசிக்கொண்டிருந்த சுகுணாவும் சென்னைக்கு வருகிறார். மொக்கை போடவேண்டும் என்ற கொலைவெறியில் ஒரு மாதமாக வரவனையானும் சென்னையில் முகாமிட்டிருக்கிறார். குறைந்தபட்சம் 25 பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்புக்கு பின் புனிதத் தீர்த்தமும் வழங்கப்படும் என்று அபி அப்பா உறுதி கூறியிருப்பதாக குசும்பன் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

* - * - * - * - * - * - *

கேள்வி : தமிழக அரசின் பட்ஜெட் பற்றி?

லக்கி : ஆட்சியில் இருப்பது கலைஞரா அல்லது எம்.ஜி.ஆரா என்ற சந்தேகம் பல பேருக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

* - * - * - * - * - * - *

கேள்வி : ஈழத்தமிழர் நலனுக்கு குரல் கொடுக்க பதவி தடையாக இருப்பதால் அரசுப் பதவியை ராஜினாமா செய்வதாக டி.ஆர். அறிவித்திருக்கிறாரே?

லக்கி : ஈழத்தமிழர் மீதான அண்ணன் டி.ஆரின் பாசத்தை யாராவது குறை கூறினால் அவர்களது நாக்கு அழுகிவிடும். சிறுவயதிலிருந்தே மேடைகளில் தன்மானச் சிங்கத்தின் பேச்சை கேட்டிருக்கிறேன். ஈழத்தமிழர் அவலங்களை கூறி மேடைகளிலேயே பலமுறை கதறி அழுதிருக்கிறார். அவர் ஈழத்தமிழர் மீதான உண்மையான பாசத்தால் தான் பதவியிலிருந்து விலகினார் என்று நம்புகிறேன்.

* - * - * - * - * - * - *

கேள்வி : தமிழ்மணத்தில் உங்களது இடுகைகள் நீக்கப்பட்டது குறித்து...

லக்கி : சிலம்பு ஏந்தி கண்ணகி போல நான் நீதி கேட்ட பதிவும் நீக்கப்பட்டிருக்கிறது. அப்பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டத்தை கீழே தருகிறேன். அனானிமஸாக வந்த அந்த பின்னூட்டம் திரட்டி நிர்வாகிகளில் ஒருவர் போட்டது போன்ற தொனியிலிருக்கிறது. எது அறம்? என்ற கேள்விக்கான விடையை பதிவர்களின் மனச்சாட்சியின் பொறுப்பிலேயே விட்டு விடுகிறேன்.

“தமிழ்மண நிர்வாகம் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அல்ல,உங்கள் உழைப்பில்/முதலீட்டில் உருவானதும் அல்ல. அது ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஏற்படுத்திய நிர்வாகம். அது அந்த நிறுவனத்திற்கே பதில் சொல்ல கடமைப்பட்டது.ஊரில்,உலகில் உள்ள எல்லோருக்கும் அல்ல.பயனர்களின் இடுகையை திரட்டியிலிருந்து நீக்க உரிமை அவர்களுக்கு உண்டு என்ற ‘புரிந்துணர்வோடு'தானே நீங்கள் திரட்டியை உங்கள் இடுகைகள்/ பின்னூட்டங்களை காட்ட பயன்படுத்துகிறீர்கள். முன்பும் பதிவர்களின் பதிவுகளை/இடுகைகளை திரட்டியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதுண்டே.ஒரு சேவையை வழங்குவோருக்கும்,பயனருக்கும் உள்ள உறவுதான் உங்களுக்கும், தமிழ்மணத்திற்கும் உள்ள உறவு. இலவச சேவையை வழங்கும் தமிழ்மணம் உங்களுக்கு எதற்காக எல்லாவறிற்கும் காரணம் சொல்ல வேண்டும் என்று எதிர்பாக்கிறீர்கள்?. ஒத்துவரவில்லை என்றால் விலகிப் போவதே நல்லது.”

* - * - * - * - * - * - *

கேள்வி : “திபெத்?”

லக்கி : இத்தனை ஆண்டுகளாக திபெத்துக்கு இந்தியா தார்மீக ஆதரவு தந்து வந்தது பாராட்டுக்குரியது. ஆனால் இனியும் இந்த ஆதரவு தொடருமா என்பது இப்போதைய சூழ்நிலையில் சந்தேகமாக இருக்கிறது. திபெத் பிரச்சினையை இலங்கைப் பிரச்சினையோடு ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இந்தியா ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியக் குடிமகன்களுக்கே சரமாரியான குழப்பத்தை விளைவிக்கும் நிலையில் இருக்கிறது!

தமிழ்மண நிர்வாகத்துக்கு வணக்கம்!

”தூத்தேறி” என்ற தலைப்பில் வந்த என்னுடைய ஒரு இடுகை நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது நன்றி. due to the following reason என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனா